இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்

2 mins read
பாஜக ஆதரவை நாடிய அதிமுக; நான்கு முனைப் போட்டி எதிர்பார்ப்பு
236d1ebf-fafa-46d2-9b01-082311574d4f
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் ஐ. பரந்தாமனும் தாராபுரத்தில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் போட்டியிடுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். - படம்: தினமணி

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் தனித் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் தனித் தொகுதிக்கான வேட்பாளராக வழக்குரைஞர் எஸ். சுகன்யா களமிறக்கப்படுகிறார்.

திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சுருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (செப்டம்பர் 9) உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் வேட்பாளர்களை அறிவித்தார்.

இடைத் தேர்தல் வேட்புமனு தொடங்கிய நாளிலேயே திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்காக வழக்கமான தொகுதிப் பொறுப்பாளர்களுடன் சிறப்பு நிர்வாகிகளையும் நியமிக்கத் தலைமை திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களின் திமுக நிர்வாகிகளும் தீவிர பிரசாரம், தேர்தல் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திரு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து காலியான தொகுதிகளுள் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பாஜக ஆதரவை நாடிய அதிமுக

இரு தொகுதிகளிலும் அதிமுகவும் களமிறங்குகிறது. இதற்கு முன்னர் அந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று இருந்தது.

தேர்தலில் ஆதரவு கோரி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை அதி​முக முன்னாள் அமைச்​சர்​கள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) சந்தித்தனர்.கட்​சித் தலை​மை​யுடன் ஆலோ​சித்து நல்ல முடிவை அறி​விப்​ப​தாக நயினார்​ கூறி​யுள்​ளதாக கே.பி.​முனு​சாமி கூறினார்.

மற்றத் தோழமைக் கட்​சிகளின் தலை​வர்​களை​யும் சந்​தித்து ஆதரவு திரட்ட அதிமுக திட்​ட​மிட்​டுள்​ளது.

ஆளும் தவெக, திமுக, அதிமுகவுடன் ஒருவேளை நாதகவும் போட்டியிட்டால் இத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவக்கூடும்.

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் தவெகவும் கூடுதல் சிரத்தையோடு வெற்றியை உறுதி செய்து நாற்காலியை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள விழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை முதல் வரும் 16ஆம் தேதிவரை நடைபெறும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17ஆம் தேதி. வேட்புமனுக்களை திரும்ப பெறக் கடைசி நாள் 19ஆம் தேதி. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு. அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

256வது முறையாகப் போட்டியிடும் தேர்தல் மன்னன்

தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட புதன்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 1988 முதல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் பத்மராஜன், அண்மையில் மேல்சபை தேர்தலுக்கு (255-வது முறை) மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அவர் 256வது முறையாக வேட்பு மனுவை அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
இடைத்தேர்தல்சட்டமன்றம்வேட்பாளர்தமிழ்நாடுதமிழகம்