சென்னை: தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்துள்ளது.
சென்னையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமையன்று பாமக சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது இந்தியாவில் பீகார், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக முதல்வர் கூறுவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சாதிவாரிக் கணக்கெடுப்பில் நடத்தப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்புவர் என்றார்.
அவ்வாறு ஏதும் நடத்தவில்லை என்று தமிழக அரசு தெரிவிக்கும் பட்சத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவிக்க வாய்ப்பு உண்டு என்றும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டால் மறுநாளில் திமுக ஆட்சி கவிழந்து விடும் என்றும் தமிழகம் கலவரப்பூமியாக மாறும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
கணக்கெடுப்பு நடத்தக்கோரி இம்மாதம் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அதன்பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அன்புமணி மேலும் தெரிவித்தார்.