சென்னை: நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (நவம்பர் 28) நடைபெற்றது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக வெளியிட்டுள்ள அந்தத் தீர்மானத்தில், திமுகவை வழிநடத்தும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திராவிட மாடல் அரசுதான், தொகுதி மறுவரையறை என்ற பேச்சு எழுந்த உடனேயே முதலில் எதிர்ப்புக் குரல் எழுப்பியது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைப் பாதிக்கின்ற வகையிலான தொகுதி மறுவரையறைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தோம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.2.2024 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அக்கட்சி கூறியது.
கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ விழுக்காடான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டதை திமுக தலைமை சனிக்கிழமை அன்று நினைவூட்டியது.
ஆனால், கொள்கைகளைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு கள்ளத்தனமாக நள்ளிரவில் கூட்டணியிலிருந்து எகிறிக் குதித்து பதவிக்காக வேறுபக்கம் தஞ்சம் அடைந்தது காங்கிரஸ் கட்சி. அப்படிப்பட்டவர்கள் இப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இரட்டை நிலைப்பாடு எடுத்துவிட்டதுபோல் பொய்ப்பிரசாரம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல என்றும் திமுக குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான ஆ.ராசா, “ஐம்பது விழுக்காடு அதிகமாக இடங்களை வழங்குவது என்ற நிலைக்கு திமுக ஆதரவை வழங்குவது என தீர்மானித்திருக்கிறோம். இது, இன்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் அவர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு என்ன முடிவை எடுத்தோமோ, அந்த முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
