மதுக்கடைகளை மூடினால் வரும் தேர்தலில் திமுக வெற்றி உறுதி: திருமா

மதுக்கடைகளை மூடினால் வரும் தேர்தலில் திமுக வெற்றி உறுதி: திருமா

2 mins read
6a7b7953-54aa-4ec1-8d81-f9f68d9bd194
மது ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய திருமாவளவன். - படம்: ஊடகம்

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடும் பட்சத்தில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு சட்டப்பேரவையில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

“புத்தர் உலகம் முழுவதும் மதுவிலக்கு பற்றி எடுத்துரைத்தார். இந்த எளியவன் தமிழகத்தில், இந்தியாவில் சொல்கிறேன். எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை. அரபு நாடுகளில் மதுக்கடைகளைக் காண முடியாது. திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதியுள்ளார்,” என்றார் திருமாவளவன்.

மதுவுக்கு அடிமையானால் மனிதவளம் அழியும் என்றும் இதில் அரசியல் பேசவேண்டாம் என்றும் தாம் குறிப்பிட்டதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டதாகச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், தாம் கூட்டணி மாறப்போவதாகக் குறிப்பிட்டு, மது ஒழிப்பு மாநாட்டின் நோக்கத்தைச் சிதைத்துவிட்டனர் என்றார்.

“காவிரி, இலங்கைப் பிரச்சினைக்காக நாம் இணைந்து பேசவில்லையா? அதேபோல் மது விலக்கு குறித்தும் பேசியிருக்க வேண்டும்.

“ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் 7 முதல் 8 நாள்கள் மட்டுமே மதுக்கடைகளை மூடுகிறார்கள். திமுகவுக்கு கொள்கை அடிப்படையில் மதுவை ஒழிக்க உடன்பாடு உள்ளது. ஆனால் அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மது ஒழிப்புக்காக தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற நிலையைக்கூட எடுக்கத் தயாராக உள்ளேன்,” என்றார் திருமாவளவன்.

இதற்கிடையே, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. எனினும், அதற்கு முந்தைய நாளே, மாநிலம் முழுவதும் 220 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.

இந்நிலையில், தமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்கமுடியாது என்றும் அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால்தான் மதுவை ஒழிக்கமுடியும் என்றும் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என திருமாவளவன் கோரும் காணொளிப்பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து திமுக, விசிக இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, விசிக முயற்சி செய்வதாகவும் விமர்சனம் எழுந்தது.

குறிப்புச் சொற்கள்