தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக அரசுக்கான நிதியை விடுவிப்பதில் சுணக்கம் வேண்டாம் - அன்புமணி

2 mins read
dedfa217-0a1a-45ae-a712-225c0857628c
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்.

சென்னை: தமிழ் நாட்டில் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரிசெய்வதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பதற்கும் தமிழக அரசு கேட்டுள்ள நிதியை விடுவிப்பதில் மத்திய அரசு சுணக்கம் காட்டக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஃபெஞ்சால் புயல் 23, நவம்பர்-2024 அன்று குறைந்த தாழ்வழுத்தப் பகுதியாக உருவெடுத்து, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புயல் காரணமாகப் பொழிந்த பெருமழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதிப்புகளில் இருந்து மீண்டுவர உடனடியாக ரூ.2,000 கோடி தமிழக அரசுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாள்களில் தமிழகத்தில் பெய்த பெருமழையால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, தமிழ் நாடு அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். அப்போதுதான் மழையால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், விளை நிலங்களில் பயிர்ச்சேதங்கள், கால்நடை உயிரிழப்புகள், கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் எனப் பல வகைகளில் தமிழ் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளான மக்கள் அனைவரும் இழப்பீட்டுத் தொகைக்காகக் காத்திருக்கின்றனர். மேலும் கட்டமைப்புகளைச் சீர்செய்ய முதலீடுகள் செய்ய வேண்டியுள்ளது. இவை அனைத்துக்கும் பெரும் நிதி தேவைப்படும். அது இன்னும் மதிப்பிடப்படவில்லை.

மேலும், மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு தமிழக அரசால் கோரப்படும் நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திரு அன்புமணி அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பல லட்சம் ஏக்கர் நிலப் பயிர்களுக்குப் பாதிப்பு, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்குச் சேதம் எனக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து மீளவும், கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் தேவையான உதவிகளை வழங்குவது மட்டும் தான் மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் விதிகள் தளர்த்தப்பட வேண்டுமே தவிர, விதிகளைக் காரணம் காட்டி நிவாரண உதவிகள் மறுக்கப்படவோ குறைக்கப்படவோ கூடாது என்று திரு அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்