சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்ல வேண்டாம்: காவல்துறை

2 mins read
8f5c53a4-3968-4067-b172-b16fc54c32b8
சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையில்  ‘பாத்து போங்க’ விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. - படம்: சமூக ஊடகம்

சென்னை: வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று இணையக் குற்றக் கண்காணிப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை சார்பில் வெளிநாடு செல்வோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது தொடர்பான ‘பாத்துப் போங்க’ விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையில் சனிக்கிழமை காலை நடந்தது.

குடிபெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரிந்தர் பகத், டிஜிபி சந்தீப் மிட்டல் ஆகியோர் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தனர். 

அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 400க்கும் மேற்பட்டோர் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.

“தற்போது அதிக அளவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் முறையாகச் செல்வதில்லை. சுற்றுலா விசாவில் செல்கின்றனர். அங்கு மிரட்டலுக்குப் பயந்து, தவறான செயல்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர். முதலில் சுற்றுலா விசாவில் சென்று, பிறகு வேலைக்கான விசா வாங்கிக்கொள்ளலாம் என்று யாராவது தெரிவித்தால், அவர்களை நம்பிப் போக வேண்டாம். அதுபோல் செல்வதால் ஆபத்துள்ளது,” என்றார் சந்தீப் மிட்டல்.

“வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக எப்படிச் செல்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. சமூக ஊடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது,” என்றார் சுரிந்தர் பகத்.

“வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்பவர்கள் பதிவு பெற்ற முகவர்கள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். பதிவு பெறாத முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். 

குறிப்புச் சொற்கள்