சென்னை: தமிழ் அறிஞர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த தொல்காப்பியர் விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், செம்மொழித் தமிழாய்வுக்காக மத்திய அரசு நிறுவனத்தின் வாயிலாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த தொல்காப்பியர் விருது உள்ளிட்ட குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழிக்கு அறிஞர்கள் ஆற்றிய ஆய்வுச் சேவையை அங்கீகரித்து ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்த விருதுகள் கிட்டத்தட்ட பத்தாண்டாக வழங்கப்படாதது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமும், தமிழ் மொழி வளர்ச்சிக்குப் போடப்படும் முட்டுக்கட்டையும் ஆகும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த விருதுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி[Ϟ]கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. 2021-22ஆம் ஆண்டுக்கு இந்த விருது பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் தகுதியானவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் பின், கடந்த சில ஆண்டுகளாக இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ் செம்மொழிக்கான சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளாக எந்த விருதும் வழங்கப்படாத நிலையில், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் படைப்புருவாக்கத்திலும் ஈடுபடும் அறிஞர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அதற்கு மத்திய அரசே காரணமாக இருக்கக் கூடாது.
அதுமட்டுமின்றி, சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய அரசு நிறுவனத்திற்கு மத்திய பல்கலைக் கழகத்திற்கு இணையான தகுதி வழங்கி, அதன் வாயிலாக மொழி ஆராய்ச்சிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.