சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பை மீறி நிறைவேற்றினால் அதற்கான விளைவுகளை தமிழ்நாட்டில் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை மீண்டும் எச்சரித்துள்ளார்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்டவற்றை மத்திய அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தாக்கல் செய்த நிலையில் அவற்றின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதில், தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) கறுப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்.
“தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.
“நம்முடைய கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.
“ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“நேரு, இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார். இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய மத்திய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
“நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்பதுதான்.
“தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்,” என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

