தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்க வேண்டாம்: உயர் நீதிமன்றம்

2 mins read
9b6e7fb6-ab0d-413e-97e4-0357a3294d9a
பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

அந்த வகையில், பா.ம.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற இருந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வியாழக்கிழமை போராட்டம் நடத்த முயற்சி செய்த பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பா.ம.க. போராட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்குத் தொடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், “பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்குப் பாதுகாப்பு தரப்படும் என்று கூறுங்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

“காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கு ஏற்புடையது அல்ல. வெறும் விளம்பரத்திற்காக இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்,” என அவர் கூறினார்.

அரசியல் விளம்பரத்துக்காகச் செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி பா.ம.க.வின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்