திருவள்ளூர்: அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (செப்.10) இரவுநேரப் பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர், மதுபோதையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய நோயாளிகளின் உறவினர்களை மருத்துவர் நல்லதம்பி தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர் நல்லதம்பியைத் கைத்தாங்கலாகத் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே அழைத்துச் சென்றதுடன், நோயாளிகள் மற்றும் உறவினர்களைச் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து, மருத்துவமனைப் பாதுகாவலர்கள், மருத்துவர் நல்லதம்பியை தாங்கள் தங்கும் அறையில் உறங்க வைத்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் புகார் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
மருத்துவர் நல்லதம்பி செவ்வாய்க்கிழமை இரவு, போதையில் நோயாளிகளிடம் நடந்துகொண்ட விதம் குறித்தான காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

