சென்னை: வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆனால், அவற்றை எல்லாம் பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
இதையடுத்து, தங்களது உத்தரவை கடுமையாக அமல்படுத்தவும் அவற்றை முறையாகப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, நடைப்பயிற்சி செல்லும்போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும்போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி போட்டுவிடுவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை முறையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படும்.
“அதாவது, நாய்களை வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி போடுவது, வாய்மூடி அணிந்து விடுவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும்.
“வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
“பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, அனைத்துலக முனைய வளாகங்கள், விமான நிலைய மெட்ரோ பின்புறத்தில் நாய்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன.
உடைமைகளை எடுத்து வரும்போது நாய்கள் துரத்துகின்றன. ‘ட்ராலி’ தள்ளிக்கொண்டு செல்ல முடியாமல் பதற்றத்தில் தடுமாறி விழுந்து காயம் ஏற்படுகிறது.
குறிப்பாக, முதியவர்கள் அதிகம் பயப்படுகின்றனர். நாய்கள் தொல்லையை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று பயணிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சி சார்பில் நாய்களைப் பிடித்து இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த வாரத்தில்கூட சுற்றித்திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டன. விமான நிலைய அதிகாரிகள், விலங்கு நல வாரியத்திடம் சிறப்பு அனுமதி பெற்று நாய்களை நிரந்தரமாக அகற்ற முடியும் என்றனர்.