அரை வேக்காடு முட்டையைச் சாப்பிட வேண்டாம்: தமிழக அரசு எச்சரிக்கை

அரை வேக்காடு முட்டையைச் சாப்பிட வேண்டாம்: தமிழக அரசு எச்சரிக்கை

2 mins read
c9ba0e02-2697-44df-bc0a-b755cb2df47a
தமிழகத்தில் மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இதுவரை ஏற்படவில்லை என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். - படம்: தினமணி

சென்னை: பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கோழி முட்டையை அரை வேக்காடாக வேக வைத்துச் சாப்பிட வேண்டாம் எனத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோழி இறைச்சியையும் முட்டையையும் முழுமையாக வேக வைத்துச் சாப்பிடுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை அடையாறு பகுதியில் சில இறந்த காகங்கள் காணப்பட்டன. அவற்றை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்தபோது, ‘ஹெச்5என்1’ பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், பறவைக் காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசின் தகவல் கிடைத்ததும் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென இறப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உடனடியாக ஆழமாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது என்றார்.

இவ்வாறு திடீரென உயிரிழக்கும் கோழிகளை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“மாநிலம் முழுவதும் தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இதுவரை ஏற்படவில்லை. மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்