சென்னை: திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் வந்த செய்தி பொய்ச் செய்தி என்று லிங்குசாமி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138ன் கீழ் தாக்கல் செய்தனர்.
“அந்த வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
“மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
“நாங்கள் எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியைப் பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம்,” என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான லிங்குசாமி தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2016ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் தங்களது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக ரூ.35 லட்சத்தை ‘Paceman Finance’ நிறுவனத்திடம் கடனாகப் பெற்றிருக்கின்றனர்.
இந்தக் கடனை வட்டியுடன் ரூ. 48 லட்சத்தை செலுத்த வேண்டும் என Paceman Finance நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சனிக்கிழமை (டிச.20) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் லிங்குசாமி, அவர் தம்பி சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து லிங்குசாமியை உடனே கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

