தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடு வீடாகச் சென்று பிரசாரம்: திட்டம் அறிவித்த ஸ்டாலின்

2 mins read
257e3ed0-2cca-4414-be29-680174034435
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு தற்போது எதிர்கொள்வது அரசியல் பிரச்சினை அல்ல என்றும் உரிமைப் பிரச்சினையைத்தான் எதிர்கொண்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரை இயக்கத்தை அவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மத்தியில் உள்ள பாஜக அரசின் போரை எதிர்கொள்ள, தமிழகத்திற்கு நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தேவை என்றார்.

“இம்முறை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரின் வீட்டுக்கும் நேரடியாக செல்ல இருக்கிறோம். மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்துக்கு எதிராகச் செயல்படுகிறது.

“எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது,” என்றார் திரு ஸ்டாலின்.

அரசியல், பண்பாடு, மொழி என அனைத்திலும் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு எதிராகச் செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்தப் புதிய பிரசாரத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 30 விழுக்காடு வாக்காளர்களைச் சேர்க்க திமுக தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது.

“தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் செல்வார்கள். திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பார்கள்.

“அனைத்து வீடுகளுக்கும் சென்று பிரசாரம் செய்யப்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பாரபட்சம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி  வீட்டுக்கும் சென்று பிரசாரம் செய்வோம்.

“பிரதமரும் அமித்ஷாவும் அடிக்கடி வந்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று பாஜகவினர் ஒவ்வொரு முறையும் பொய் சொல்கிறார்கள்.

“இது தொடர்பான உண்மை நிலை மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளது. இதனால் திமுகவுக்கு நன்மைதான் விளையும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் திமுக அவ்வாறு கேட்கவில்லை என்றும் ஆளுநர் திமுகவுக்கு எதிராகச் செயல்படுவதன் மூலம் தங்களுக்கு நன்மைதான் செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்