21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இரண்டடுக்கு மாடிப் பேருந்துச் சேவை

2 mins read
0a679597-ae80-4db9-a41f-70cec30b6920
கடைசியாக கடந்த 2003-04 ஆண்டு சென்னையில் பிராட்வே-வண்டலூர் வழித்தடத்தில் இரண்டடுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டன. - படம்: தினத்தந்தி

சென்னை: ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இரண்டடுக்கு மாடி பேருந்துச் சேவை மீண்டும் தொடங்க உள்ளது.

இதற்கு சென்னைவாசிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மெட்ரோ ரயில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிக எண்ணிக்கையிலான விரைவுப் பேருந்துகளை இயக்குதல், மின்சாரப் பேருந்துகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளன.

அடுத்தகட்டமாக, பெருநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக 20 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார இரண்டடுக்குப் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 380 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவற்றுள் 100 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவை என்றும் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

இரண்டடுக்குப் பேருந்துகளை இயக்க குறைந்தபட்சம் 4.75 மீட்டருக்கு செங்குத்து இடைவெளி தேவை.

அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய முக்கிய வழித்தடங்களில் மாடிப் பேருந்துகளை இயக்க முடியும் என்பதால் அதற்கான ஆய்வுகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் மாடிப் பேருந்துச் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கடைசியாக கடந்த 2003-04 ஆண்டு சென்னையில் பிராட்வே-வண்டலூர் வழித்தடத்தில் இரண்டடுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அச்சமயம் மாடிப்பேருந்து செல்லும் வழித்தடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டியிருந்ததால் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்த ஏற்பாட்டில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன.

இதையடுத்து, மாடிப்பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அச்சேவையைப் பயன்படுத்திய சென்னைவாசிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்