இரட்டைக் கொலை; சிவகங்கையில் சாலை மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

இரட்டைக் கொலை; சிவகங்கையில் சாலை மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

படம்: தினமணி

18 Sep 2026 - 6:55 pm

2 mins read

சிவகங்கை: சிவகங்கை அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) கைது செய்துள்ளனர்.

கொடிக்காடு கண்மாயில் புதன்கிழமை (செப்டம்பர்16) இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் காளையார்கோவில் சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டாவது நாளாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) இரண்டாவது நாளாக காளையார்கோவில் சந்தைப்பேட்டை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) இரண்டாவது நாளாக காளையார்கோவில் சந்தைப்பேட்டை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: தினமணி

300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்தால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

காளையார்கோவில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், காளையார்கோவில் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், காளையார்கோவில் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. - படம்: தினமணி

சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கு, மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடியவர்களைக் காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகளைக் கைது செய்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, நீதி கேட்டுப் போராடுபவர்கள் மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக ஆட்சி அமைந்தது முதலே தலைநகர் சென்னை முதல் மாநிலம் முழுவதும் கொலைச் சம்பவங்கள் அரங்கேறாத நாளே இல்லை எனும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் சாடினார்.

சிவகங்கை இரட்டைக் கொலை, மதுரை மாணவர் மரணம் ஆகிய இரு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுசிவகங்கைகொலைகாவல்துறைகைதுபொதுமக்கள்சாலைபோராட்டம்