அரசியலிலிருந்து ஓய்வு: மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு

அரசியலிலிருந்து ஓய்வு: மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு

2 mins read
ebb1cc31-226e-40ce-a594-fbba22d89201
திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் தமது 88வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடினார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ், 88, தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தம்முடைய இந்தத் திடீர் முடிவுக்கான காரணங்களை விளக்கினார்.

“என் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளேன். இனிமேல் நான் அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன்,” என்று அவர் கூறினார்.

இனி அரசியலையும் பாமகவையும் தம் மகன் அன்புமணியும் அவருடைய துணைவியாரும் பார்த்துக்கொள்வர் என்றும் திரு ராமதாஸ் குறிப்பிட்டார்.

மருத்துவச் சேவையிலிருந்து விலகிய திரு ராமதாஸ், கடந்த 1989ஆம் ஆண்டில் பாமகவைத் தொடங்கி அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டங்களை நடத்தியதன்மூலம் அவர் புகழ்பெற்றார்.

சமூக நீதிக்காகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ந்து குரல்கொடுத்து வந்துள்ளார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுசக்தியாகப் பாமகவை உயர்த்த அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் மாநாடுகளையும் தொடர்ந்து நடத்தினார்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் கூட்டணி அரசியலைத் தீர்மானிப்பதில் பாமக முதன்மைச் சக்தியாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் பலமுறை ஆட்சி மாற்றங்களுக்கும் தேர்தல் வெற்றிகளுக்கும் திரு ராமதாசின் உத்திகள் முக்கியக் காரணமாக அமைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாழ்வில் தாம் மேற்கொண்ட பயணத்திற்கு ஆதரவளித்த கட்சித் தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் மருத்துவர் ராமதாஸ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அரசியலிலிருந்து ஒதுங்கினாலும், சமூகநலன் சார்ந்த விவகாரங்களில் தம்முடைய கருத்துகளைத் தொடர்ந்து பதிவுசெய்யப்போவதாக அவர் கூறினார். கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் சோர்வின்றி உழைத்து, தொடர்ந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மருத்துவர் ராமதாசின் திடீர் ஓய்வு அறிவிப்பு பாமக தொண்டர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்