தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

2 mins read
d3a61d9f-fa9b-4ea7-bd57-398ab2aac764
பெரும்பாலான மாவட்டங்களில் லட்சகணக்கானோர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. - கோப்புப்படம்: நியூஸ் 7

சென்னை: அரசியல் கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்த தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னையில் ஆக அதிகமாக பதினான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் ஏறக்குறைய 75 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் மூலம், பெரும்பாலான மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

டிசம்பர் 4ஆம் தேதி இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், வாக்காளர்கள் தங்கள் படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு இருமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து டிசம்பர் 14ஆம் தேதி அனைத்து பணிகளும் முடிவடைந்ததாக தெரிவித்த தேர்தல் ஆணையம், டிசம்பர் 19ஆம் தேதி தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்து இருந்தது.

அதன்படி வெளியான புதிய பட்டியலில் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முன்பிருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இது 35.6% ஆகும்.

தமிழகத்தின் ஆகப் பெரிய பகுதியான சோழிங்கநல்லூரில் 2.18 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட எஸ்ஐஆர் நடவடிக்கை பயன்பட்டுள்ளது.

தர்மபுரியில் ஏறக்குறைய 81,000, கரூரில் சுமார் 80,000, திருச்சியில் 3.31 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 3.24 லட்சம், சேலத்தில் 3.61 லட்சம், நாமக்கல்லில் 1.93 லட்சம், விழுப்புரத்தில் 1.8 லட்சம், கிருஷ்ணகிரியில் 1.74 லட்சம், ராணிப்பேட்டையில் 1.45 லட்சம், நாகையில் 57,000, செங்கல்பட்டில் 7 லட்சம், திருப்பூரில் 5.63 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் 3.80 லட்சம், காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம், கடலூரில் 2.46 லட்சம், புதுக்கோட்டையில் 1.39 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்