தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 30 விழுக்காடே எஞ்சியுள்ளது: ஸ்டாலின்

2 mins read
4e135112-a583-49ae-8fc1-366546ad8764
சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாகப் பார்வையிட்டார். - படம்: ஊடகம்

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ததோடு நிவாரணப் பணிகள் செவ்வனே நடந்து வருவதை அதிகாரிகளிடம் கேட்டு உறுதிசெய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்த ஆய்வின்போது தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததுமே, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து வெள்ளத்தடுப்புப் பணிகளை முடுக்கிவிடப்பட்டது.

“அந்தக் குழு பரிந்துரைத்தபடி பணிகள் படிப்படியாக நிறைவடைந்து வருகிறது. பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகளை ஒரேயடியாகச் செய்து முடிப்பது என்பது சாத்தியமல்ல. இருப்பினும் அந்தப் பணிகள் ஓரளவு முடிந்திருக்கின்றன. இன்னும் 30 விழுக்காட்டுப் பணிகளே எஞ்சியுள்ளன,” என்று கூறினார்.

சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்படாத வகையில், செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளும் செவ்வனே செய்து முடிக்கப்படும். எனவே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக முதல்வர் கூறினார்.

முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரை பணி தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கனமழை குறித்த ‘எச்சரிக்கை’ பெறப்பட்டவுடன் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்,” என ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது.

அந்த மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதையடுத்து சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது.

குறிப்புச் சொற்கள்