சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என பேசியிருந்த சீமான், வியாழக்கிழமை (ஜனவரி 9) செய்தியாளர்கள் சந்திப்பில், ‘வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்?’ எனப் பேசினார்.
முன்னதாக, சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் - திராவிடர் கழகம் மோதல்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் பேசும்போது, பெரியாரை விமர்சித்து கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை (ஜனவரி 9) புதுவை நெல்லித்தோப்பில் உள்ள கீர்த்தி மகாலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது புதுவை மாநிலத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். சுப்பையா சிலை சதுக்கத்திலிருந்து கீர்த்தி மகாலை நோக்கி அவர்கள் முன்னேற முயன்றனர். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் மணிமேகலை பள்ளி அருகே சீமானை வரவேற்க ஒன்று கூடியிருந்தனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர்.
இருதரப்பினரும் மோதிக்கொள்ளாமல் இருக்க தடுப்பு வேலிகள் வைத்து காவல்துறையினர் தடுத்தனர். காவல்துறையினரைத் தள்ளிவிட்டு இருதரப்பினரும் முன்னேற முயன்றனர். இவர்களில் சிலர் செருப்பு, கற்களை வீசினர். ஒரு கட்டத்தில் காவல்துறையினர் இருதரப்பையும் அடித்துத் துரத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் கொடிகளைப் பிடுங்கி கிழித்து எறிந்தனர். சீமான் உருவப்படத்தை அவமதிப்பு செய்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் திராவிடர் இயக்கத்தினரை குண்டுக்கட்டாகத் தூக்கி வேன், பேருந்துகளில் ஏற்றி அவர்களை அப்புறப்படுத்தினர்.
சுமார் 100 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி கலவரப் பூமியாக காட்சியளித்தது. போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

