கோவை: நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க சில தரப்பினர் அழைப்பு விடுப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
எனினும், வெற்றி, தோல்விகளைக் கடந்து தனித்துதான் போட்டி என்ற தனது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அவர் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஒரு கட்சி தங்களது கூட்டணிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்து அழைப்பது இயல்புதான் என்றார்.
“எனினும், எங்களது நிலைப்பாடு ஒன்றுதான். தேர்தல் அரசியல், கட்சி அரசியல் செய்பவர்கள்தான் கட்சிகளைத் தேடி, கட்சித் தலைமையை, தலைமை அலுவலகங்களைத் தேடிச் செல்வார்கள். நாங்கள் மக்கள் அரசியல் செய்பவர்கள்.
“அந்தவகையில் ஏற்கெனவே தொடர்ச்சியாக 2 சட்டப்பேரவை, 2 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறோம். வெற்றி, தோல்விகளைக் கடந்து ஐந்தாவது முறையும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சிதான்.
“எங்களுக்கென்று ஒரு கனவு இருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டும். அதனால் தனித்துதான் போட்டியிடுவோம்,” என்றார் சீமான்.
2026 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் 134 தொகுதிகளில் இளையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்த அவர், அரசியல் வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
“எங்கள் பயணம் எங்களது கால்களை நம்பித்தான் இருக்கும். பிறர் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதைவிட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது,” என்று சீமான் மேலும் கூறினார்.

