கன்னியாகுமரி: பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சிலர் பேருந்தை நிறுத்தும்படி கைகாட்டியும் நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இம்மாதம் 13ஆம் தேதி மாலையில் நாகர்கோவில் வடசேரியிலிருந்து நெல்லை மாவட்டம் கூட்டப்புளிக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது.
அப்பேருந்து அழகப்பபுரத்தைச் சென்றடைந்தபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்கள் சிலர் பேருந்தை நிறுத்தும்படி கைகாட்டினர். ஆனாலும், பேருந்து நிற்காமல் சென்றது.
இதனைக் கண்ட இளையர்கள், மோட்டார்சைக்கிளில் விரட்டிச் சென்று அந்தப் பேருந்தை வழிமறித்தனர். பேருந்தை நிறுத்தாமல் சென்றதற்காக அதன் ஓட்டுநருடனும் நடத்துநருடனும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தெரியாமல் தவறுசெய்துவிட்டதாக பேருந்தின் ஓட்டுநர் அந்த இளையர்களிடம் கூறினார்.
இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அப்பேருந்தின் ஓட்டுநரையும் நடத்துநரையும் பணியிடைநீக்கம் செய்து, நாகர்கோவில் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் உத்தரவிட்டார்.