சென்னை: போதைப் பொருளை விற்பனை செய்ததாக சேலத்தை சேர்ந்த பிரதீப் குமார், பெங்களூரைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவர் ஜான் ஆகியோரை கடந்த வாரம் காவல்துறை கைது செய்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கொகைன் போதைப்பொருளை பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் கொடுத்த தகவல் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவும் அவருக்கு போதைப் பொருள் விநியோகம் செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
நடிகர் கிருஷ்ணா பயன்படுத்திய கைத் தொலைபேசியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் இடம் பெற்றுள்ள நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிருஷ்ணா கொகைன் போதைப் பொருளை விநியோகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த்திற்கு தினமும் காலை நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. அந்த நாளிதழ்களில் வரும் செய்திகளை ஸ்ரீகாந்த் உன்னிப்பாக படிக்கிறாராம்.
நடிகர் கிருஷ்ணா கைதுசெய்யப்பட்ட தகவலை நாளிதழின் வாயிலாக தெரிந்துகொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா எந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரை நான் பார்க்க அனுமதியளிக்க முடியுமா என்று சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
நடிகர் கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

