கடலூர்: கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுப்புட்டிகளில் போதை மருந்து கலக்கப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம், கோணாங்குப்பம் கிராமத்தில் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மங்கலம் பேட்டை காவல்துறையினர், பார்த்தசாரதி என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 40 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், மதுப்புட்டியில் அதிக போதை தரும் வகையில் போதைப்பொருள் கலக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதல் தகவல் அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து மதுப்பிரியர்களும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோணாங்குப்பம் கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் நச்சுத்தன்மையுடன் கூடிய வாடை வந்ததாகவும் அதை அருந்தியவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்படும் என்றும் தெரிய வந்ததாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கள்ளச்சந்தையில் மது விற்ற பார்த்தசாரதியை தீவிரமாக விசாரித்தபோது, அதிக லாபத்துக்காக போதைமருந்தை வாங்கி அதை மதுவில் கலந்து விற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மது, அடுத்தகட்ட பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கள்ளச்சந்தையில் மது விற்ற பார்த்தசாரதியை தீவிரமாக விசாரித்தபோது, அதிக லாபத்துக்காக போதைமருந்தை வாங்கி அதை மதுவில் கலந்து விற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மது, அடுத்தகட்ட பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு மதுப்புட்டியில் போதை மருந்து கலப்பதால் அதிக போதை ஏற்படுவது உயிருக்கே ஆபத்தாக அமையும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறை இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறின.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிர் இழந்தது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கைதான 24 பேரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள அவர்களின் காவலை நீட்டித்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

