தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரிலிருந்து சென்னைக்கு ரூ.50 லட்சம் மதிப்புடைய போதைப்பொருள் கடத்தல்

1 mins read
7951bc58-e131-4c35-a979-2afc133394df
கொள்கலன் லாரியில் மூட்டை மூட்டையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்காவைக் காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பெங்களூரிலிருந்து 10 டன் குட்கா போதைப்பொருளைக் கடத்தி வந்த கொள்கலன் லாரியைப் பூந்தமல்லி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், தடையை மீறி சிறுகடைகள் முதல் பல கடைகளில் குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாரிவாக்கம் போக்குவரத்து விளக்கு அருகே பூந்தமல்லி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த கொள்கலன் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, மூட்டை மூட்டையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லாரி ஓட்டுநரான 28 வயது விக்னேஷ் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணையில், அவர் பெங்களூரிலிருந்து குட்காவை லாரியில் ஏற்றி வந்து, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ 50 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்