சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தினால் மாணவர்களின் கல்வி பாதிப்பதுடன் குடும்ப வாழ்க்கையும் பாழாகிவிடும் எனத் தமிழகக் காவல்துறைத் தலைவர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற உலக போதைப்பொருள் எதிர்ப்பு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், போதைப்பொருள்களின் நடமாட்டம் குறித்த தகவல்களைக் காவல்துறைக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
போதைப்பொருள் கடத்துபவர்களின் வங்கிக்கணக்குகள், சொத்துகளை முடக்குவது உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
கஞ்சா, செயற்கைப் போதைப்பொருள்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதில்லை என்றும் அவை பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுகின்ற என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய இளையர்கள் சமூக ஊடகங்கள், போதைப்பொருளுக்கு எளிதில் அடிமையாகிவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்வு, வேலை ஆகியவற்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் இளையர்கள், போதையின் பக்கம் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட விளையாட்டு, யோகா, நடனம் ஆகியவற்றில் இளையர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
கல்வி, தொழில்துறையில் தமிழகம் சிறந்து விளங்கும் வேளையில் இளையர்களிடையே போதைப்பழக்கம் அதிகரிப்பது, பொருளியல் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கிவிடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், போதைப்பொருளைக் கடத்துபவர்களும் அவற்றைப் பயன்படுத்துபவர்களும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.

