போதைப் பொருள்: கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் கைது; 688 வீடுகளில் சோதனை

போதைப் பொருள்: கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் கைது; 688 வீடுகளில் சோதனை

1 mins read
308680d6-0eec-427a-a0a6-e8b709a6860b
பொத்தேரிக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிக்கு அருகே ஏராளமான போதைப்பொருள்களை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர். - படம்: ஊடகம்

செங்கல்பட்டு: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 21 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக காவல் துறைக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 21 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போதை மாத்திரைகள், கஞ்சா, பாங் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.

தனியார் கல்லூரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 688 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் காவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டதாக தாம்பரம் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சோதனை நடவடிக்கைக்குப்பின்னர் 60 இருசக்கர வாகனங்களும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களும் கைதாகி இருப்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்