சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு கிலோ உயர்ரகக் கஞ்சாவைப் பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
இதில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து சென்று திரும்பியிருந்தார். அவரிடம் சோதனை செய்தபோது ஒன்பது பொட்டலங்கள் இருந்தன.
அதில் போதைப்பொருள் மற்றும் 6 கிலோ உயர்ரகக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பயணியைச் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை காலை விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட மற்றொரு சோதனையில் 414 கிராம் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கப்பசையைக் கொண்டு வந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

