விஜய் கட்சி மாநாட்டு பாதுகாப்புப் பணியில் துபாய் நிறுவனம்

2 mins read
38e5ffd6-9a54-4b92-9172-a9480e391a3e
60அடி அகலத்தில் தமிழக வெற்றி கழக மாநாட்டு மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குத் துபாயைச் சேர்ந்த விவிஐபி பாதுகாப்புச் சேவை நிறுவனம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. அந்நிறுவனத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.

விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், சுவெ என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பரப் பணிகளைச் செய்து வருகின்றனர். மேலும் மாவட்டங்கள்தோறும் சென்று புஸ்ஸி ஆனந்த் மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 4ஆம் தேதி மாநாட்டுப் பந்தலுக்கான பூமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மேடை, பந்தல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு, ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு விவிஐபி பாதுகாப்புச் சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மாநாட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள், மேடை அலங்காரம், விருந்தினர்களை வரவேற்பது, விஜய்க்கு வரவேற்பு, கூட்ட நெரிசலைச் சமாளிப்பது, உணவு உள்ளிட்டவற்றை வழங்குவது, வாகனம் நிறுத்துமிட வசதிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பது என மாநாட்டு ஒருங்கிணைப்புப் பணிகளை அந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

அத்துடன், தொண்டர்களுக்கு அவசர மருத்துவச் சேவை வழங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொண்டூழியர்கள், கட்சித் தொண்டர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் என 7,000க்கும் மேற்பட்டவர்கள் மாநாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சியை விவிஐபி பாதுகாப்புச் சேவை நிறுவனம் வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அந்தக் கட்சியினர் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்