சிவகாசி: இரவில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு காரணமாக, சிவகாசி, திருவில்லிபுத்தூர், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சில வீடுகள் லேசாகக் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் செல்லாமல் இரவு முழுவதும் வீதிகளிலேயே தஞ்சமடைந்தனர்.
சிவகாசியில் வியாழக்கிழமை (ஜனவரி 29) இரவு 9.06 மணி அளவில் திடீரென இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும் சில விநாடிகள் நீடித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
சாத்தூர், கூமாபட்டி, கிருஷ்ணன் கோவில், செங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில அதிர்வை உணர முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் மூன்று புள்ளிகளாகப் பதிவானது எனத் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

