தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.101 கோடி சொத்துகள் முடக்கம்

2 mins read
1bd6aadd-87b6-4a11-a824-d37898e5b848
ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கத்துக்குச் சொந்தமான ரூ.101 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அமலாக்கத்துறை வைத்திலிங்கத்துக்கு எதிராக நடத்தி வரும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கின் ஒரு பகுதியாக சொத்து முடக்கம் இடம்பெற்று உள்ளது.

திருச்சியில் வைத்திலிங்கத்தின் குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத் துறை அதன் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை தெரிவித்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவா் ஆா்.வைத்திலிங்கம்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் 2022ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வத்தோடு சேர்த்து வைத்திலிங்கத்தையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது தனியாா் சொத்து நிறுவனத்திடம் வீட்டுவசதித் திட்டத்துக்கு அனுமதி தர ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது.

அந்த வழக்குடன் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை பல கோடி ரூபாய்க்கும் மேல் இருந்ததால் அமலாக்கத் துறை இயக்குநரகம் அந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விசாரித்து வந்தது.

அதனைத் தொடர்ந்து, 2024 அக்டோபரில் வைத்திலிங்கம் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களின் வீடுகள், அலுவலகங்கள் அமைந்துள்ள தஞ்சாவூா், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை வைத்திலிங்கம் தரப்பு, பெயரளவுக்கு இயக்கப்பட்டு வந்த சில நிறுவனங்களில் வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து திருச்சியில் சில மனைகள் வாங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அந்த விவகாரங்களின் தொடர்ச்சியாக தற்போது 100.92 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்