தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் விவகாரத்தில் சிக்கினால் கல்வித் தகுதி ரத்தாகும்

2 mins read
5d5c9efc-1d7f-40a3-baa8-14e395cba19b
அன்பில் மகேஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இனி பள்ளிகளில் பாலியல் விவகாரம் தொடர்பாக புகார்கள் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித் தகுதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அண்மைய சில நாள்களாக தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில், தனியார் பள்ளியின் நிர்வாகியும் அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரும் கைதாகி உள்ளனர்.

மேலும் பர்கூர் பகுதியில் பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதனால் பெற்றோர் மத்தியில் அச்சமும் கோபமும் நிலவி வருகிறது.

அடுத்தடுத்து பாலியல் அத்துமீறல் குறித்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பாலியல் தொல்லைகள் குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல்துறை மூலம் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் இனியும் தொடரக்கூடாது என்பதற்காக புதிய சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

இத்தகைய குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு, கட்டாயத் தண்டனை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறையும் காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

குறிப்புச் சொற்கள்