வேதனைச் சிறுத்தைகள்

வேதனைச் சிறுத்தைகள்

3 mins read
e66b6886-8769-4be0-a900-4bbbd7310d90
தொல். திருமாவளவன் - படம்: தமிழ் முரசு
multi-img1 of 2

தேர்தலைச் சந்திக்கும் கூட்டணியில் எத்தனைக் கட்சிகள் உள்ளன என்பதைக் காட்டிலும் அவை அத்தனையும் ஒன்றின் வெற்றிக்கு மற்றொன்று வேலை செய்கிறதா என்பதே முக்கியம்.

முரண்பாடான கட்சிகள் கூட்டணியில் இருப்பது அதன் வெற்றியைப் பாதிக்கும்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் 8 இடங்களைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக உள்ளது என காலையில் செய்தி வெளியான நிலையில் மாலையில் நிலைமை மாறியது. ஈரிலக்கமாக 10 இடங்களைப் பெற்று அந்த இடத்திற்கு தேமுதிக வந்தது.

அது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் வெற்றிக்கு இத்தனை காலம் துணையாக இருந்த கட்சிகளிடமிருந்து பறித்த தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்துள்ளது திமுக.

அது மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகியவற்றைக் காட்டிலும் இருமடங்கு அதிகமான தொகுதிகள் தேமுதிகவிடம் தரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அக்கட்சிக்கு வழங்கப்பட்டு, திருமதி பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் அந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டுவிட்டார்.

2011க்குப் பிறகு ஏறத்தாழ 15 ஆண்டு காலம் அந்தக் கட்சி சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கான வாக்குகளைப் பெறவில்லை.

திரு விஜயகாந்த் தலைமையில் தனியாகப் போட்டியிட்டபோது 8.38% வாக்குகளையும் 2011ல் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டபோது 7.88% வாக்குகளையும் பெற்று வலுவான நிலையில் இருந்த தேமுதிக அதன்பிறகு தேர்தலுக்குத் தேர்தல் தேய்ந்து 2021 தேர்தலில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக 0.43 விழுக்காட்டு வாக்குகளையே பெற்றது.

கூட்டணியில் இணைவதற்கு முன்னர், திமுக பக்கமே திரும்பக்கூடாது என முடிவெடுத்து அந்தக் கட்சியின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து வந்தது தேமுதிக.

இப்படிப்பட்ட கட்சிக்கு திடீரென முக்கியத்துவம் கொடுத்து தாங்குவது, கூட்டணியில் திமுக ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கும் மற்றக் கட்சிகளுக்கு கடுப்பேற்றி உள்ளது.

அரசியல் கட்சி என்னும் அங்கீகாரம் பெற்று தேர்தலுக்குத் தேர்தல் வளர்ந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இம்முறை ஈரிலக்க இடங்களைக் கேட்டு மன்றாடிப் பார்த்தது. இறுதிவரை திமுக மசியவில்லை. எட்டு இடங்களுடன் திருமா திருப்தியடைந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அது அவரது கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிகவுக்கு எந்த வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் சளைத்ததல்ல என்பது அவர்களின் வாதம். கமல்ஹாசன்மீதும் அவர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடவில்லை என மநீம தலைவர் கமல் அறிவித்தார். அதனால், அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஓரிரு இடங்களும் தேமுதிகவுக்குச் சேர்த்து வழங்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கூறுகிறார்கள்.

முன்கூட்டியே கமல் தமது அறிவிப்பை வெளியிட்டிருந்தால் தங்கள் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்திருக்கும் என்பது அவர்களின் வாதம்.

ஆயினும், ஒருவகையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இது லாபமே. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கும் மதிமுகவுக்கும் கடந்த முறையைக் காட்டிலும் தொகுதிகள் குறைக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6லிருந்து 8 என அதிகமாகத் தரப்பட்டுள்ளது. இதனையே திமுகவினர் நியாயப்படுத்துகிறார்கள்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து, தேர்தலையே புறக்கணித்த கமல்ஹாசனும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத வெறுப்பில் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவுகிறது.

இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையை நோக்கி நின்றால் தேர்தல் களம் கூட்டணிக்குச் சாதகமாக இருக்குமா என்பதே இப்போதைய கேள்வி. -திருநா

குறிப்புச் சொற்கள்