மதுரை: பாண்டிய மன்னர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில், பாண்டியநாடு அறக்கட்டளை சார்பாக பாண்டியர் அரும்பொருளகம் விரைவில் தொடங்க உள்ளது.
இதற்குத் தேவையான ஆயிரம் பண்டைய நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடு, ஓலைச்சுவடி, பொற்கலன்கள் போன்ற வரலாற்றுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்த அறக்கட்டளையின் வரலாற்று ஆய்வுக்குழுவின் முதன்மை ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, சேகரிக்கப்பட்ட 28 நாணயங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“முற்காலப் பாண்டியர் முதல் தென்காசிப் பாண்டியர்கள் நாணயம் வரை சேகரிக்கப்பட்டு வருகிறது. தவிர சேரர், சோழர் பல்லவர்கள், விஜயநகர பேரரசுகளின் நாணயங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பண்டைய நாணய ஆர்வலர்கள், வரலாற்று ஆசிரியர்கள், நாணயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இது வரலாற்றை மீட்டெடுக்கும் புனிதப் பணியாக கருதுகிறோம்.
“பாண்டியர்கள் காலத்தில் நாணயங்கள் செம்பிலும் தங்கத்திலும் வெளியிடப்பட்டன. தங்க நாணயங்கள் கழஞ்சு, வராகன், காசு, பொன் என அழைக்கப்பட்டன. செப்பு நாணயங்களை செப்புக் காசுகள் என்று அழைத்தனர். கழஞ்சு என்ற பெயர் பாண்டியப் பெருவேந்தர் காலத்துக் கல்வெட்டுகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ‘எல்லாம் தலையானான்’ என்ற பட்டப் பெயரை முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பெற்றிருந்தார்.
“இந்த ‘எல்லாம் தலையானான்’ நாணயம் ஐந்து வகைகளில் காணப்படுகிறது. இந்த ஐந்து வகை நாணயங்களில், ஒரு பக்கம் அரசர் ஒருவர் நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.
“முதல் நாணயத்தில் ‘எல்லாம் தலையானான்’ என்ற தொடர் மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது நாணயத்தில் ஒரு மீன் செங்குத்தாக பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதியில் எல்லாம் தலையானான் என்ற தொடர் கடிகாரச் சுற்றுமுறையில் பொறிக்கப்பட்டுள்ளது,” என்று ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.