விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி: கோழிப் பண்ணையாளர் சங்கம் தகவல்

விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி: கோழிப் பண்ணையாளர் சங்கம் தகவல்

2 mins read
8da4d5e3-d6fd-484c-b296-8b0d0a2820c6
நாமக்கல் வட்டாரங்களில் 1,200க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. - கோப்புப்படம்: தினத்தந்தி

நாமக்கல்: தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் முட்டைகளை ஏற்​றுமதி செய்​வதற்​கான நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக தமிழ்​நாடு கோழிப் பண்​ணை​யாளர்​கள் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்​கத்​தின் செய​லா​ளர் சுந்​தர்​ராஜன், மத்திய கிழக்கு நாடு​களில் நில​வும் போர்ப் பதற்​றம் காரண​மாகக் கப்​பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் முட்டை ஏற்​றும​தி​யும் குறைந்​துள்​ளது என்றார்.

“எனவேதான் விமானம் மூலம் முட்டை ஏற்​றுமதி செய்​வதற்​கான நடவடிக்கைகள் மேற்கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. அதே வேளை​யில் கப்​பல்​கள் மூலம் ஓரிரு கொள்கலன்களில் முட்​டைகள் ஏற்​றுமதி நடைபெற்று வரு​கிறது. போர்ப் பதற்​றம் தணிந்தால் முட்டை ஏற்​றுமதி சீராகும்,” என்றார் திரு சுந்தர்ராஜன்.

நாமக்கல் வட்டாரங்களில் 1,200க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

துபாய், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கப்பல்களில் நாள்தோறும் 80 லட்சம் முட்டைகள் கொள்கலன்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே, கோழிப் பண்​ணை​களில் 21 நாள்​களுக்கு ஒரு முறை கோழிகளின் ரத்த மாதிரி​கள் எடுக்​கப்​பட்டு ஆய்​வுக்கு அனுப்பப்படுவதாகவும் பறவைக் காய்ச்​சல் பாதிப்பின்மை காரணமாக ஏற்​றுமதிக் கட்டுப்பாடுகள் இன்றி நடை​பெறுவதாகவும் திரு சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

“அண்மையில் ராசிபுரத்​தில் உள்ள கோழிப் ​பண்ணை ஒன்​றில் கோடை வெப்​பம் காரண​மாகக் கோழிகள் அதி​கள​வில் இறந்​தன. மக்​களுக்குப் பாதிப்பில்லாத வகை​யில் அவற்றை முறையாக அப்புறப்படுத்த பண்ணை உரிமை​யாள​ருக்கு உரிய அறி​வுறுத்​தல் வழங்கப்பட்டுள்ளது. நாமக்​கல் மண்​டலத்​தில் பறவைக் காய்ச்​சல் பாதிப்பு எது​வும் இல்​லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்