ஹஜ்ஜுப் பெருநாள்: பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

ஹஜ்ஜுப் பெருநாள்: பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

1 mins read
df067d95-296c-42e2-811d-e20985c2568c
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்கப்பட்டன. - படம்: இடிவி பாரத்

ஆலங்குளம்: தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ரெட்டியார்பட்டி ஆட்டுச்சந்தையில், ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சனிக்கிழமை (மே 23) ஒரே நாளில் சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனையாகின.

தமிழ்நாட்டில் மே 28ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

அன்று 'குர்பான்’ கொடுப்பதற்காக ஆடுகளை வாங்குவதற்கு சனிக்கிழமை அதிகாலை முதலே ரெட்டியார்பட்டி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழைமையான அச்சந்தைக்குத் தென்காசி மட்டுமின்றி, தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான வணிகர்களும் பொதுமக்களும் வருகை தந்தனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச் சந்தையிலும் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.4 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனையாயின.

விலை கடுமையாக உயர்ந்தபோதிலும் மக்கள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கிச் சென்றதாக வணிகர் ஒருவர் கூறினார்.

அதுபோல, மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆட்டுச் சந்தையிலும் ஒரே நாளில் ரூ.7 கோடிக்குமேல் ஆடுகள் விற்பனையானதாகத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தையில் ஆட்டின் தரத்திற்கும் எடைக்கும் ஏற்ப ஓர் ஆடு 5,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரைக்கும் விலைபோனதாகக் கூறப்பட்டது.

பெருநாளை ஒட்டி நடந்த இந்தப் பெருவணிகத்தால் ஆடு வளர்ப்போரும் வணிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்