தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் எட்டுப் பேர் மரணம்

2 mins read
ad418b0a-b4be-4c0e-a598-6b80fe0afff5
வேகமாக மோதியதில் நொறுங்கிய பேருந்துகள். - படம்: தமிழக ஊடகம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 24) இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஐவர் பெண்கள்.

உயிரிழந்தோர் தவிர, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் துரைசாமிபுரத்தில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின.

மோதிய வேகத்தில் இரு பேருந்துகளின் பயணிகளும் நசுங்கினர்.

விபத்து பற்றி அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விபத்தில் சிக்கியவர்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். வாகனத்துக்குக் கீழே மூன்று பயணிகள் சிக்கியிருந்ததாகவும் அவர்களை பொதுமக்கள் மீட்டதாகவும் கூறப்படுகிறது.

பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என மருத்துவர்கள் கூறினர்.

மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோரும் மாவட்ட காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்தும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

விபத்து எப்படி நேர்ந்தது, நேருக்கு நேர் பேருந்துகள் மோதியதற்குக் காரணம் என்ன என்பன போன்ற விவரங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் அடையாளம் உடனடியாகக் காணப்படவில்லை.

விபத்து நிகழ்ந்த பின்னர் அந்தப் பகுதியில் ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு போக்குவரத்து தடைப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் செல்லக் கூடிய தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு செல்வதாகவும் அதன் காரணமாக அதிவேகமாக பேருந்துகள் இயக்கப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
விபத்துபேருந்துவிசாரணைஉயிரிழப்பு