திருப்பூர்: தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டி வருகிறது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலும் சுவர்களில் கட்சி சின்னங்களை வரைவது, கையில் கட்சிக்கொடிகளுடன் வலம்வந்து வாக்கு சேகரிப்பது என்று தொண்டர்கள் பரபரப்பாகச் செயல்படுவது வழக்கம்.
தற்போது சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட போதிலும், நேரடிப் பிரசாரத்துக்கான மவுசு இன்னும் குறையவில்லை.
இப்போதும் சிற்றூர்களில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கட்சிக் கொடிகளுடன் சென்று பிரசாரம் மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் திருப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். காரணம், தமிழகத்தில் கட்சிக்கொடிகள், சின்னம் பொறித்த ஆடைகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
அண்மைய சில ஆண்டுகளாக கட்சிக்கொடிகளின் வியாபாரம் மந்தமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, திருப்பூர் நிறுவனங்களில் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பே தேர்தலுக்குத் தயாராகிவிட்டது திருப்பூர். அங்கு கட்சிக்கொடிகள், சின்னம் பொறிக்கப்பட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது அது வேகமாக விற்று வருவதாகவும் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில், குஜராத்தின் சூரத் நகரில் இருந்து கொடிகளை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திருப்பூரைச் சேர்ந்த ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

