கேரளா, புதுச்சேரி, அசாமில் ஓய்ந்த தேர்தல் பிரசாரம்

கேரளா, புதுச்சேரி, அசாமில் ஓய்ந்த தேர்தல் பிரசாரம்

1 mins read
a83ce520-e8ce-414c-9d16-40e3cf74ce70
(இடமிருந்து) அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன். - படம்: தினமலர்

புதுடெல்லி: கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இறுதி நாளான அன்று அனைத்து வேட்பாளர்களும் பேரணிகள், ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தினர்.

அப்பகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கிறது. புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் 294 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வரிசையாக புதுச்சேரிக்கு வருகைதந்து பொதுக்கூட்டங்களையும் சாலைப் பேரணிகளையும் நடத்தி வாக்கு சேகரித்தனர்.

அசாமில் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான கூட்டணியை எதிர்த்து கவுரவ் கோகாய் தலைமையிலான காங்கிரஸ், அகில் கோகாய் தலைமையிலான ராய்ஜோர் தளம் உள்ளிட்ட 15 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணி போட்டியிடுகிறது. அசாமில் மொத்தம் 789 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. அவர்களுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மும்முனைப் போட்டியை அளிக்கிறது. கேரளாவில் மொத்தம் 985 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேற்கண்ட மூன்று மாநிலங்களில் மொத்தமுள்ள 296 சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு 2,140 பேர் போட்டியிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்