வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம்

வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம்

1 mins read
25343f03-434c-4b03-86ab-d55174bc1722
ராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநிலத் தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாநகராட்சி பராமரிக்கும் ஆயிரம் பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

‘நம்ம தங்கா’ எனும் காகம் சின்னத்தை மையப்படுத்தி, ‘எனது வாக்கு எனது உரிமை’ என்ற ‘செல்ஃபி’ பதாகைகளும் காணப்படுகின்றன.

மேலும், ‘எல்ஈடி’ தொலைக்காட்சிப் பெட்டியுடன் கூடிய 18 கண்காட்சிப் பேருந்துகளும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வீடுகள்தோறும் திடக்கழிவுகளைச் சேகரிக்கும் மூன்று சக்கர வாகனங்கள், அரசுப் பேருந்துகள் ஆகியவையும் இந்த விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அனைத்து வாகனங்களிலும் காகம் சின்னத்துடன் கூடிய ‘எனது வாக்கு எனது உரிமை’ வாசகம் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, கடற்கரையில் மணற்சிற்பம் அமைத்தல், பொம்மலாட்ட நிகழ்ச்சி, மனிதச்சங்கிலி அமைத்தல், ரங்கோலி, நாட்டுப்புறக் கலைஞர்களின் விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள் கும்மிப்பாட்டு, தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், திடீர்க் குழு நடனம், கையெழுத்து இயக்கம் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, ‘நம்ம தங்கா’ காகத்தின் ‘எனது வாக்கு எனது உரிமை’ பதாகை முன் நின்று, வாக்காளர்கள் ஆர்வத்துடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்வதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்