தேர்தல் களம் புதிதாக உள்ளது: திருமா

தேர்தல் களம் புதிதாக உள்ளது: திருமா

2 mins read
b6c97467-bb21-4dc5-a0fb-9ce65841bf81
திருமாவளவன் - கோப்புப் படம்: தினமலர்

சென்னை: ஏறக்குறைய 25 ஆண்டுகளைக் கடந்து வந்தாலும் தேர்தல் களம் இன்னமும் புதிதாக இருக்கிறது. அதனால் போராடி தொகுதிகளை வென்றாக வேண்டும், அதற்குத் தேவையான நிதியைத் திரட்ட வேண்டும் என்று தமது கட்சித் தொண்டர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அவர், காணொளி வழியாக தொண்டர்களிடையே உரையாற்றினார்.

“மிகக் குறுகிய எண்ணிக்கையை நாம் பெற்றாலும் நம்முடைய அரசியல் உறுதிப்பாட்டை அது மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்ற நம்பிக்கையுடன் தேர்தலுக்குத் தயாராகுவோம்.

“போராடி தொகுதியைப் பெற்றாக வேண்டும்.

“போராடி நிதியைத் திரட்ட வேண்டும். நெருக்கடிகளுக்கு இடையில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பணிச்சுமைகள் இருக்கின்றன,” என்றார் அவர்.

“நான் வெளிப்படையாகப் பேசுவதற்குக் காரணம், 25 ஆண்டுகளைக் கடந்து வந்தாலும்கூட இந்தக் களம் இன்னும் நமக்கு புதிதாகத்தான் இருக்கிறது.

“இன்னும் அதற்கு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளவில்லை. சமூகச் சூழலும் நமக்கு ஏதுவாக அமையவில்லை.

“நாம் எந்த வகையிலும் வலிமை பெற்றுவிடக்கூடாது என்று கருதுகிறவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மை.

“அரசியல் சக்தியாக பரிணமிக்கக்கூடாது என்று எண்ணுகிறவர்கள்தான் இங்கு பெரும்பான்மை,” என்று அவர் சொன்னதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகக் களமாடுகிறோம். மக்கள் மத்தியில் உள்ள நம்பகத்தன்மையை பாதுகாப்பது தான் உண்மையான வெற்றி.

“வலதுசாரி மதவாத சக்திகள் இடமிருந்து பாதுகாப்பது தான் நமது முதன்மையான கடமை. நாம் குறைவான எண்ணிக்கைகள் பெற்று போட்டியிட்டாலும் கூட தமிழகம் முழுவதும் விருப்பமனு பெறுதல் என்பது ஜனநாயகக் கடமை. அதனை கடைப்பிடித்து வருகிறோம்.

“எந்தெந்தத் தொகுதிகளில் இருந்து யார் யார் போட்டியிட விரும்புகின்றனர் என்பதையும் இதன்மூலம் அறிய முடியும்,” என்று திருமாவளவன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்