சென்னை: தமிழகத்தின் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்த பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடைத்தேர்தல் தொடர்பான தடையை நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
தேர்தல் ஆணையம் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட உடனேயே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றார். தேர்தலை நடத்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஆறு மாத அவகாசம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தேர்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் முடிவடைந்த பின்னரே, முறைப்படி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
விசாரணையின்போது, மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய உடனே இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதேவேளையில், வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனத் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளது.
