இடைத்தேர்தல்: தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது

இடைத்தேர்தல்: தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது

படம்: தினமணி

22 Sep 2026 - 7:28 pm

1 mins read

சென்னை: இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) விறுவிறுப்பாகத் தொடங்கின.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் இடையே ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு நேரில் வராமல், தங்களது இல்லங்களிலிருந்தே வாக்களிக்கும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காகத் தாராபுரம் தொகுதியில் மட்டும் 1,236 தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பொருட்டு, அதிகாரிகள் அடங்கிய 30 சிறப்பு மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் நேரடியாக தகுதியான வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, வாக்காளர் ரகசியத்தைக் காக்கும் வகையில் தபால் வாக்குகளைப் பதிவு செய்து பெட்டிகளில் சேகரித்து வருகின்றனர். இச்செயல்முறை முழுமையாகக் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தபால் வாக்கு சேகரிப்பு பணி தொடங்கியுள்ளதால் தாராபுரம் தொகுதி மக்களிடையே தேர்தல் காய்ச்சல் மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
நடிகர்சங்கம்இடைத்தேர்தல்சட்டமன்றம்தொகுதிமுதியோர்மாற்றுத்திறனாளிவாக்களிப்பு