தேர்தல் முடிவுகள்: இணையத்தில் பந்தய மோகம்

தேர்தல் முடிவுகள்: இணையத்தில் பந்தய மோகம்

2 mins read
c33ee8f9-b58e-43ea-9e5f-5ad76c38e7d1
பெரும்பாலும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளையர்கள்தான் பந்தயம் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. - சித்திரிப்பு: தி நியூஸ் மினிட்
Google News Preferred Icon

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி, இணையத்தில் ஏராளமானோர் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பங்கேற்போர் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டுவதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

எந்தக் கட்சி தனிப்பெரும்பான்மை பெறும், எந்தக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும், தமிழகத்தின் அடுத்த முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் யார், விஜய்யின் தவெக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து ஏராளமானோர் பந்தயம் கட்டி வருகின்றனர்.

பெரும்பாலும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளையர்கள்தான் பந்தயம் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், பந்தயத்துக்கு ஏற்பாடு செய்வோர் இளையர்களைக் குறிவைத்துக் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் இந்த அறிவிப்புகள் வெளியாகின்றன.

மேலும், தனிப்பட்ட வகையிலும் நேரடியாக இளையர்களைத் தொடர்புகொண்டும் அவர்களைப் பந்தயம் கட்ட தூண்டிவிடுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக, இணையம்வழி ஏற்பாடு செய்யப்படும் பந்தயங்களில், வெற்றிபெறுவோர்க்கு அடுத்த 24 மணிநேரத்துக்குள் பணப்பட்டுவாடா செய்யப்படும்.

இந்நிலையில், இந்தத் தேர்தல் பந்தயத்தில் வெற்றிபெற்றால் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த ஒருசில மணி நேரங்களுக்குள் பரிசுத்தொகை கிடைக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏராளமான இளையர்கள் தேர்தல் பந்தயத்தில் பங்கேற்று ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி வருவதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பந்தயங்களில் பங்கேற்போர் பணத்தை லட்சக்கணக்கில் இழக்க வாய்ப்பு உள்ளதால் காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்