சென்னை: தமிழகம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன என்றார் அவர்.
மேலும் இரட்டை பதிவுகளை நீக்கும் பணியும் இந்த ஆய்வின் மூலம் நடைபெறுவதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட திரு. சத்யபிரதா சாகு இந்தப்பணிகள் எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என்றார்.
“தற்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர். பட்டியலை சரிபார்த்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் புதிதாக குடியேறியவர்கள், குறிப்பிட்ட முகவரியில் இருந்து மாறியவர்கள், புதிதாக திருமணமானவர்கள், இறந்தவர்கள் என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறது” என்றார் சத்யபிரதா சாகு.

