சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களைச் சேர்க்க ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) அண்மையில் வெளியானது. அதற்கு முன்பு தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
‘எஸ்ஐஆர்’ நடவடிக்கைக்குப் பிறகு ஏறக்குறைய 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து புதிய, விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தொடங்கியது. இதற்காக புதிய விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களைச் சேர்க்க 7.37 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வாக்காளர் பட்டியலில் இருந்து 9,535 பேரை நீக்குவதற்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
பெயர் விடுபட்டுப்போனவர்கள் விண்ணப்பம் அளிக்க, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

