மின்கட்டணம் உயர்த்தப்படாது: வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் உறுதி

மின்கட்டணம் உயர்த்தப்படாது: வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் உறுதி

2 mins read
297d2962-b261-49fb-b239-3c5085c83cb5
தமிழக மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வியாழக்கிழமை (ஜூன் 25) அவர் வெளியிட்டார்.

அப்போது, மின்சார வாரியத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்சுமை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகத் தவெக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்கட்டணம் உயர்த்தப்படும்போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

எனினும், கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை என்றும் புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2021-2026 வரையிலான காலகட்டத்தில் மின்வாரியத்துக்கான செலவு ரூ.5.32 லட்சம் கோடியாகவும் மின்வாரிய வருமானம் ரூ.4.97 லட்சம் கோடி எனத் தெரிவித்த அவர், தற்போது மின்வாரியத்தின் பற்றாக்குறை ரூ.34,447 கோடியாக உள்ளது என்றார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மின்வாரியத்தில் 74,174 ஊழியர்கள் பணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு நிர்மல் குமார், அவ்வாரியத்துக்கு 140,635 மின் ஊழியர்களின் தேவை இருப்பதாகத் தெரிவித்தார்.

“மின்துறைக்கு மொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் உள்ளது. மின்வாரிய வரலாற்றிலேயே கடந்த ஆட்சிக் காலத்தில்தான் அதிக வருவாய் ஈட்டப்பட்டு, அதேநேரம் செலவும் அதிகமாகச் செய்யப்பட்டது.

“அதேநேரம் 2021-2026ஆம் ஆண்டில், மின்வாரியத்தின் கடன் ரூ.87.399 கோடி ஆகும். இவ்வளவு வரவு இருந்து, செலவும் செய்து, கடனும் வாங்கி உள்கட்டமைப்புகள் பெரிதாக மேம்படுத்தப்படவில்லை,” என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டினார்.

நடப்பாண்டு மின்கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்றும் மின்சேமிப்புத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்
மின்சாரம்கட்டணம்அமைச்சர்