சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மின்வாரியத் துறைகளில் அதிக இழப்புகளைச் சந்தித்த மாநிலங்களின் வரிசையில் தமிழ் நாடு மின்வாரியத் துறையும் இணைந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் அந்தத் துறையில் நடக்கும் ஊழல்களும் முறைகேடுகளும்தான். அத்துடன், நிலுவையில் உள்ள மின் திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியம் இத்தகைய இழப்பைச் சந்தித்துள்ளது என்று கூறியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
வீட்டுப் பயன்பாடு, வணிகப் பயன்பாடு என ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் தனித்தனியாக கட்டணத்தை உயர்த்தி வருவாய் ஈட்டியும் அந்த வருவாயில் கிட்டத்தட்ட 62 விழுக்காட்டுத் தொகையை தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்குச் செலவழிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மின்வாரியத் துறையின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று அன்புமணி கூறியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். மின் வாரியத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.