சென்னை: தமிழ்நாட்டைப் புறக்கணித்த மத்திய பட்ஜெட் வெறும் காகிதக் குப்பை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
“2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு ஆளும் பாஜக அரசு செய்திருக்கிற பச்சைத் துரோகம்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “பாஜகவின் கூட்டணி ஆளுகிற பீகார் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு சிறப்புத் திட்டங்களை வாரி வழங்கியுள்ள நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காமல் புறக்கணித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
“பாதுகாப்புத்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கிவிட்டு, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நிதியை அதிகரிக்காமல் தவிர்த்த காரணத்தினால் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் வாழ்கின்ற அடித்தட்டு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
“பெரும் இழப்பில் இயங்கி வரும் வேளாண்மைத்துறையை முன்னேற்றுவதற்கான சிறப்புத் திட்டங்கள், விவசாயிகளை முன்னேற்றுவதற்கான அறிவிப்புகள் என எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
“கடுமையான விலைவாசி ஏற்றத்தால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலையில், விலைவாசி ஏற்றத்திற்குக் காரணமான பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படாதது விலைவாசி ஏற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
“வறுமையின் கோரப்பிடிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்குப் பயன்படுகிற எந்த ஒரு நல்ல திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை.
“தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருப்பதன் மூலம் இந்த அறிக்கையை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பையாகவே கருதுகிறேன்,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.