தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பக் கோளாற்றால் தமிழக இந்து அறநிலையத்துறை இணையத்தளம் முடக்கம்

2 mins read
02d6d528-05a2-48d7-83d8-b0db84483f86
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட தமிழகக் கோயில்கள் தொழில்நுட்பக் கோளாற்றால் பாதிக்கப்பட்டன. - மாதிரிப் படம்: எஸ்ஸார் / விக்கிபீடியா

மதுரை: தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை இணையத்தளம் தொழில்நுட்ப கோளாற்றால் 24 மணிநேரத்துக்கும் மேலாக முடங்கியது.

அதனால் இணையம்வழிக் கட்டணச் சேவைகள் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அறநிலையத்துறையை நவீனமாக்கும் ஓர் அங்கமாக 2017ஆம் ஆண்டு அது கணினிமயமாக்கப்பட்டது. கோயில்களின் அனைத்து விவரங்களும் உள்ளடக்கிய சர்வர் இயந்திரம் உருவாக்கப்பட்டது.

இதன்மூலம் கோயில்களில் பக்தர்கள், வாடகைதாரர்கள் இணையம் வழியே கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனி இணையத்தளமும் அறநிலையத்துறையின் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைத்து கோயில்களின் வருவாயையும் அறநிலையத்துறை கண்காணித்துவரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பிற்பகலிலிருந்து தொழில்நுட்பக் கோளாற்றால் துறையின் இணையத்தளம் முடங்கியது.

24 மணிநேரத்திக்குப் பிறகு சனிக்கிழமை (மார்ச் 15) பிற்பகல் இணையத்தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அவ்வப்போது சில மணிநேரம் தொழில்நுட்பக் கோளாற்றால் இணையத்தளம் பாதிக்கப்படும்; அத்தகைய சூழல்களில் இணையச் சேவைகள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் நடப்பில் இருப்பதாக அறநிலையத்துறை ஊழியர்கள் கூறினர் என்று தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், வெள்ளிக்கிழமையன்று அந்த வழிமுறைகளும் பயன்படாத அளவிற்கு இணையத்தளம் முடங்கிப்போனதாக அவர்கள் குறிப்பிட்டனர்.பழனி உள்ளிட்ட கோயில்களில் இலவச முடிகாணிக்கையை கணக்கிட பக்தர்கள் மொட்டை எடுக்கும் முன், எடுத்த பின் எடுக்கப்படும் படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

அதன்படி எத்தனை பேர் முடி காணிக்கை செலுத்தினர் எனக்கணக்கிட்டு அதற்குரிய தொகை வழங்கப்படும்; ஆனால் தொழில்நுட்பக் கோளாற்றால் அதிலும் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்